அடைக்கலம் தேவன் நமக்கு அடைக்கலம்

அடைக்கலம் தேவன் நமக்கு அடைக்கலம்
அனுகூலம் ஆபத்து காலத்தில் அனுகூலம்

1.    பூமி  நிலைமாறினாலுமே
மலைகள் கடலிலே சாய்ந்தாலுமே
பர்வதங்கள் அதிர்ந்தாலுமே
நாம் என்றும் பயப்படோம் – 2

2.    அநாதி தேவன் பெலனானவர்
அன்பின் உருவம் உடையவர்
அன்னையைப்போல் அணைப்பவர்
ஆறுதல் என்றும் அளிப்பவர் – 2

3.    ஆபத்து காலத்தில் அரணானவர்
ஆனந்த களிப்பாய் மாற்றியவர்
வல்லமை மகத்துவம் நிறைந்தவர்
வாக்கில் என்றும் மாறாதவர் – 2

4.    ஆபிரகாம் தேவன் வாக்களித்தவர்
ஈசாக்கின் தேவன் ஆசீர்தந்தவர்
யாக்கோபின் தேவன் துணையானவர்
சேனைகளின் தேவன் ஜெயமானவர் – 2

அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமை உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

அக்கினியின் தேவன்

அக்கினியின் தேவன்
எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன்
எனக்குள்ளே இருக்கிறார் – 2

கலங்கமாட்டேன்
நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத்தான் – 2

-:1:-
எலியாவின் தேவனே
எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே
எனக்குள்ளே இருக்கிறார் – கலங்க

-:2:-

சாத்தானின் சூழ்ச்சி எல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே – கலங்க

-:3:-

என் பாத்திரம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுமே – கலங்க

ஆமென் !அல்லேலுயா

ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா
ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா

அனுபல்லவி

ஓம் அனாதி தந்தார், இறந்
துயிர்த்தெழுந்தரே, உன்னதரே –

சரண்ங்கள்

வெற்றி கொண்டார்ப்பரித்து-கொடும் வே
தாளத்தை சங்கரித்து, முறித்து ;
பத்ராசனக் கிறிஸ்து -மரித்து
பாடுபட்டுத தரித்து , முடித்தார் .

சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,
ஜீவனே விடிந்து ,- தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-

வேடம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,
மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித் தார்

வர வேணும் என தரசே

வர வேணும் ,என தரசே ,
மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி

அருணோ தயம் ஒளிர பிரகாசா ,
அசரீரி ஒரே சரு வேசா !- வர
வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,
ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,
தாதாவும் தாய் சகலமும் நீயே :
நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர
படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,
முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,
இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர
வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,
ஞானகரமே, நடு நிலை யோவா ,
நண்பா , உனத நன்மையின் மகா தேவா !

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

மறவாதே மனமே

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும்

எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .

சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே

வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே

எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே

உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே – எங்கே

தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே

ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்

சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்

மானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்

சரணங்கள்

பரகதி திறந்து பாரினில் பிறந்து ,
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,
சிந்தையில் உவந்தவசீகர சினேகனை – என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

யேசு ராசா -எனை-ஆளும் நேசா

யேசு ராசா -எனை-ஆளும் நேசா !

சரணங்கள்
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே ,-மனு
வேலே, மாமறை நூலே , தேவ செங்
கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய் – யேசு

தாவீ தரசன் மைந்தா -நின்
சரணம் சரணம் ,எந்தா !-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்; மிக வந்தனம் ,வந்தனம் !- யேசு

ஐயா, என் மனம் ஆற்றி ,-உன
தடிமை என்றனைத் தேற்றிக் -குண
மாக்கி ,வினை நீக்கிக் கை
தூக்கி ,மெய் பாக்கியம் கொடு -யேசு

சுத்த திருத்துவ வஸ்துவே ,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே ,-பரி
சுத்தனே ,கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம் -யேசு

மங்களம் ஈசாவே, -வளம் மிகும்
சங்கையின் ராசாவே ,-நரர்
வாழ்வே ,மன் னாவே, மெய்த்
தேவே , உமக கோசன்னாவே !- யேசு

ராச ராச பிதா மைந்த

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே !

அனுபல்லவி

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக –

சரணங்கள்

மாசிலாமணியே ! மந்தர ஆசிலா அணியே ! சுந்த்ர
நேசமே பணியே , தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே ! இறையான சாந்தனே ! மறை – ராச

ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே ,முந்த
வேதா பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே ;
பத ஆமனாமானா ! சுதனாமனாமனா! சித- ராச

மேன்மையா சனனே ,நன்மை மேவுபோசனனே ,தொன்மை
பான்மை வாசனனே ,புன்மை பாவ மோசனனே ,
கிருபா கரா நரா! சருவேசுரா ! பரா ,திரு – ராச

வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே ,மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான் ;சுரராடு கோவினான், பர -ராச

நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே ;-சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே ;-நான் என் செய்வேனென்று ..

அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வார வினை வந்தாலும் .- நெஞ்

சரணங்கள்

பட்டயம் பஞ்சம் வந்தாலும், அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும் ,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் – நெஞ்

சின்னத்தனம் எண்ணினாலும் – நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும் , வந்தணாப்பினாலும் -நெஞ்

கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும் ,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் -நெஞ்

விந்தை கிரிஸ்தேசு ராசா

விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை.

சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் –

திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே –

உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் –

சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-

இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-

நித்தம் முயல் மனமே

நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்

அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்

என் உள்ளங் கவரும்

என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .

அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்

சரணங்கள்

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்

சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்

உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் – என்

அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்

அருமை ரட்சகா

அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .

அனுபல்லவி

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு

சரணங்கள்

ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் – அரு

ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு

உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு

கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு

எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு

பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு

இயேசு நான் நிற்குங் கன்மலையே

இயேசு நான் நிற்குங் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே !

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே-என்றான்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்,-நான்
ஏசுவின் நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்.- இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,- சற்றும்
உலையாத எனது நங்கூரம் அவரே .- இயேசு

பேரு வெள்ளம் ,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்ஞை,ஆணை, இரத்தம் என் காவல்;
இருதயத்தின் நிலை அசைய-அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே .-இயேசு

சோதியாய் அவர் வரும்போது – நான்
சுத்தனைத் தரிசித்தே அவரைப் போலாவேன்;
நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்;-இயேசு

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

உன்னையன்றி வேறே கெதி

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமி!

அனுபல்லவி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! – ஆசை என் யேசு ஸ்வாமீ!- உன்னை

சரணங்கள்

பண்ணின துரோகமெல்லாம்- எண்ணினா லெத்தனை கோடி
பாதகத்துக்குண்டோ எல்லை -பர தவித்தேனே தேடி ,
கண்ணினாலுன் திருவடிக் -காண நான் தகுமோ தான்?
கடையனுக்கருள் புரி -மடியுமுன் யேசு ஸ்வாமீ! – உன்னை

அஞ்சியஞ்சித் தூர நின்றென்- சஞ்சலங்களை நான் சொல்லி ,
அலைகடல் துரும்பு போல்- மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த -வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து -க்ருபை வை யேசு ஸ்வாமீ! -உன்னை

எத்தனை கற்றாலும் தேவ -பக்தி யேது மற்ற பாவி ,
எவ்வளவு புத்தி கேட்டும் -அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் -கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப்- பிழைக்கவை யேசு சுவாமீ ! -உன்னை

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டா லாவதென்ன ?
கல்லைப் போல் கடினங் கொண்ட – கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன்-உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் -உருக வை யேசு ஸ்வாமீ -உன்னை

வந்தனம் வந்தனமே தேவ

வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே !-இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.

சரணங்கள்

சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுனன்றிகடையாலமே,-நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காதததுவே-எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே , சத்ய
சருவேசுரனே ,கிருபாகரனே ,உன் சருவத்துகுந் துதியே .

உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை -உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .

சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, – சம

ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், – சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

சரணம் சரணம் ஆனந்தா சச்சிதானந்தா

சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா ,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பன்னினான் .- சர

கற்றூணில் சேர்த்திருகக்கட்டி, வலுவாய்க்
காவலன் தன சேர்வை எல்லாம் கூடி அளித்தார்- சர

முள்ளின் முடி செய்தழுத்தி வள்ளல் எனவே
மூர்க்க முடனே தடிகொன் டார்க்க அடித்தார் – சர

கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் -சர

துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் ,
துன்னிய கைக்கோளை வாங்கி சென்னியில் போட்டார் .சர

முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே ,
முன்ன்வனைப் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் -சர

உனக்கு நிகரானவர் யார் ?

உனக்கு நிகரானவர் யார் ? – இந்த
உலக முழுவதிலுமே .

அனுபல்லவி

தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

சரணங்கள்

1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ?
நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ?
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .

2. கந்தை உரிந்தெறிந்தனை – நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை,
மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை;
கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே ,
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி – உனக்கு

புண்ணியர் இவர் யாரோ ?

புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?

அனுபல்லவி
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண்

சரணங்கள்
1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்
ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-

2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்
3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்

வாரா வினை வந்தாலும் , சோராதே

வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா

தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா

ஒரு மருந்தரும் குருமருந்

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே .

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து ,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து ,
வரும் வினைகள் மாற்றும் மருந்து
வறுமையுளோர்க்கே வாய்த்த மருந்து -குரு

சரணங்கள்

சிங்கார வனத்தில் செழித்த மருந்து ,
ஜீவ தரு மீதில் படர்ந்த மருந்து ,
அங்கு விளை பவம் மாற்றும் மருந்து ,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து -குரு

மோசே முதல் முன்னோர் காணா மருந்து ,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து ,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து -குரு

தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து ,
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து ,
மனுவை உலகினில் வந்த மருந்து – குரு

செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து ,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து ,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து -குரு

நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .

சரணங்கள்

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச

மங்களம் ஜெயமங்களம்

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

ச்ரணங்கள்

எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்

நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்

சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்

இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்

எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே,- எனக்கெல்லாம்
தொல்லைமிகு மிவ்வுலகில் -துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்;

தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் ,-

கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்,
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்-

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .-